ஆசியப்போட்டியில் பங்கேற்க போவதில்லை: மேரிகோம் உறுதி

விளையாட்டு

புதுடெல்லி, மார்ச் 19:2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் போட்டியாக கருதப்படும், ஆசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் திட்டமில்லை என்று இந்திய நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தெரிவித்துள்ளார்.

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் தாய்லாந்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பெறும் புள்ளிகளின் அடிப்படையில், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற உதவும் என்று கருதப்படுகிறது. ஆனால், ஆசிய போட்டியில் தான் பங்கேற்கும் திட்டமில்லை என்று மேரிகோம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தனது 51 கிலோ பிரிவில் எதிராளிகள் நிலை குறித்து அறிய வேண்டியுள்ளதால், ரஷியாவில் வரும் செப்டம்பரில் நடக்கவுள்ள உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்கவுள்ளதாகவும், முறையாக திட்டமிடாமல் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியாது. எனவே, தான் முக்கிய போட்டிகளை தேர்வு செய்து கலந்து கொள்கிறேன், என்றார்.
மேலும், தான் ஓய்வு பெற்றாலும், குத்துச்சண்டை விளையாட்டிலேயேதான் தனது வாழ்நாள் இருக்கும் எனவும் மேரிகோம் தெரிவித்துள்ளார்.