சென்னை, மார்ச் 19: நிபந்தனை ஜாமினில் வெளிவந்து தலைமறைவாகியிருந்த ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகளை வாகன சோதனையின்போது போலீசார் கைது செய்தனர்.

4 கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பினு, கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி ரவுடிகள் புடைச்சூழ பட்டாக்கத்தியில் கேக் வெட்டி தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருடன் 75 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஜூன் 23-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்ட ரவுடி பினு, அவரது கூட்டாளிகள் மனோஜ், அரவிந்த் ஆகிய 3 பேருக்கும், மாங்காடு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டது.

ஆனால், ஜாமினில் வெளிவந்த 6 நாட்களிலேயே இவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை எழும்பூர் காந்தி-இர்வின் மேம்பால சாலையில் இன்று காலை போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அப்பகுதியில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், தேடப்பட்டுவந்த ரவுடி பினு (வயது 45) மற்றும் அவரது கூட்டாளிகள் மனோஜ், அரவிந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.