சென்னை, மார்ச் 19: நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ள கரும்பு விவசாயி சின்னத்தை சென்னையில் இன்று சீமான் வெளியிட்டார். 23-ந் தேதி வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க போவதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயம் தொடர்பான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்து இருந்தோம்.மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும். தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும்.

வரும் 23-ம் தேதி, நாம் தமிழர் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்றார். கடந்த தேர்தல்களில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

எத்தனை தொகுதிகளில் போட்டி யிடுவீர்கள் என்று கேட்டதற்கு, அது பற்றிய விவரத்தை பின்னர் தெரிவிப்போம் என்றும் வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் சீமான் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 25-ந் தேதி முதல் சுற்றுப்பயணம் செய்து வேட்பாளர்களின் வெற்றிக்கு பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அவர் மேலும் கூறினார்