சென்னை, மார்ச் 19: பெரிய வியாழன் பண்டிகை காரணமாக, கிறிஸ்தவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்து நாளைக்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அன்றையதினம், கிறிஸ்தவர்களின் பெரிய வியாழன் பண்டிகை கொண்டாடப்படுவதால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் அல்லது கிறிஸ்தவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்
சாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என தமிழ்நாடு பிஷப் கவுன்சில் தலைவர் அந்தோணி பப்புசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், பெரிய வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டர் போன்ற பண்டிகைகளுடன் அந்த வாரம் முழுவதும் புனித வாரமாக கடை பிடிக்கப்படும். கிறிஸ்தவ பள்ளிகளில் வாக்குச் சாவடிகள் அமைக்கும் போது, தேர்தல் ஆணையம் அப்பள்ளிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதால், பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாத நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது தேர்தல் ஆணையத் தரப்பில், வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 18 ம் தேதி மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால், வாக்குப்பதிவு செய்வதற்கான நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், வாக்குப்பதிவு நாளில் கிறிஸ்துவர்களின் பெரிய வியாழன் பண்டிகை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைகேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் நாளை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளை மறுநாளுக்கு தள்ளி வைத்தார்.