அதிமுக, திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் ஒரே நாளில் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு தேர்தல் களத்தை சூடாக்கி உள்ளன.
நீட் தேர்வு ரத்து, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, தமிழ் ஆட்சி மொழி, ஏழு பேர் விடுதலை, டெல்டா மாவட்டங்களில் சிறப்பு வேளாண் மண்டலம், நதிநீர் இணைப்பு, தனியார் துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, மாநில பட்டியலில் கல்வி ஆகியவற்றை தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இரு
கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன.

அதிமுக தேர்தல் அறிக்கை

சென்னை, மார்ச் 19: அதிமுக தேர்தல் அறிக்கையை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணி அரசு அமைந்தால், வறுமையை ஒழிக்கும் நோக்கத்தில் நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கும் அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.1500
* எம்ஜிஆர் வேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டுத் திட்டம்
* நீர் மேலாண்மைக்கு புதிய திட்டம்
* காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம்
* நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டம்
* மாணவர் கல்விக்கடன் ரத்து
* விவசாயிகள் கடன் சுமையை நீக்க உரிய நடவடிக்கை
* மாநில பட்டியலுக்கு கல்வியை மீண்டும் கொண்டு வருதல்
* நீட் தேர்வு ரத்து
* தனியார் துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு
* மதம் மாறினலும் சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு
* இலங்கை தமிழர்கள் படுகொலையில் திமுக-காங்கிரஸ் சதியை வெளிக்கொணர உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தல்
* ஏழு தமிழர்கள் விடுதலை
* பொது சிவில் சட்டம் கொண்டுவரும் முயற்சிக்கு எதிர்ப்பு
* தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும்
* காவிரி டெல்டா வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்
* புதுவைக்கு முழு மாநில அந்தஸ்து

திமுகவின் தேர்தல் அறிக்கை

சென்னை, மார்ச் 19: திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கட்சி நிர்வாகிகள் அதில் கலந்து கொண்டனர்.
வேளாண்மைக்கு தனி பட்ஜெட் வெளியிடப்படும் என்றும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்துதல், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.8000, சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல் போன்ற அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் இணை ஆட்சி மொழியாக தமிழ் கொண்டுவரப்படும்.
* வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்.
* மாநிலங்களுக்கு 60% நிதி பகிர்வு.
* மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்
* தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.8 ஆயிரம்
* பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்க நடவடிக்கை
* கேஸ் விலை பழைய முறைக்கு கொண்டு வரப்படும்
* தென்னிந்திய நதிகள் இணைப்பு
* மாநிலப் பட்டியலில் கல்வி
* நீட் தேர்வு ரத்து
* கல்விக்கடன்கள் முழுமையாக தள்ளுபடி
* தனியார் துறையில் இட ஒதுக்கீடு
* ஒரு கோடி சாலைப் பணியாளர்கள் நியமனம்
* ஐந்து லட்சம் பெண்களுக்கு கிராம நல பணியாளர்கள்
* இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை
* ஒப்பந்தம் முடிந்த சுங்கச்
சாவடிகளில் கட்டணம் ரத்து
* மதுரை, திருச்சி, கோவை, சேலத்தில் மெட்ரோ ரெயில்
சேவை
* கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரும்