சென்னை, மார்ச் 19: சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 4.5 கிலோ தங்கக்கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில், ரெயில்வே டி.எஸ்.பி. எட்வர்டு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆலப்புழா விரைவு ரெயிலில் சோதனையிட்ட போது, சந்தேகத்திற்குரிய 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர்கள் கைப்பையை சோதனையிட்டபோது, அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 4.5 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டதையடுத்து, போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக, கேரளாவை சேர்ந்த லிஹோ (வயது 32), சனில் (வயது 48), பிரகாசன் (வயது 30), சத்யபாலன் (வயது 38) என்ற 4 பேரிடமும் தீவிர விசாரணை நடந்துவருகிறது.