நீதிபதி கண் முன்னால் மனைவிக்கு கத்தி குத்து

குற்றம்

சென்னை, மார்ச் 19: சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணை அறையிலேயே, நீதிபதி முன்பு மனைவியை கத்தியால் குத்திய கணவனின் வெறிச் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் குடும்பநல நீதிமன்றங்கள், சிபிஐ, சிறப்பு நீதிமன்றங்கள், செசன்ஸ் நீதிமன்றங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இதில் கீள் தளத்தில், முதலாவது கூடுதல் குடும்பநல நீதிமன்றம் உள்ளது.

இங்கு, விவாகரத்து வழக்கு விசாரணைக்காக, சரவணன், அவரது மனைவி வரலட்சுமி ஆகியோர் இன்று வந்துள்ளனர். இவர்கள் தவிர, இன்றைய வழக்கு விசாரணைக்காக, ஆண்களும், பெண்களும் அதிகளவில் வந்து இருந்தனர். வழக்குகளை நீதிபதி கலைவாணன் விசாரித்து கொண்டிருந்தார். அப்போது, நீதிமன்ற விசாரணையில் இருந்த
சரவணன், திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மனைவி வரலட்சுமி வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதை கண்டதும், விசாரணை அறையில் இருந்த ஆண்கள், பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டு, வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதியும் அதிர்ச்சி அடைந்தார்.

இச்சம்பவத்தை கேள்விப்பட்டதும், வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் இருந்த வரலட்சுமியை மீட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து, ஸ்டேன்லி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
அங்கு இருந்த சரவணனை போலீசார், பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவன் மறைத்து எடுத்து வந்த கத்தியையும் போலீசார் கைப்பற்றினர்.

பாதுகாப்பு நிறைந்த நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் நீதிமன்ற விசாரணை அறையிலேயே, நீதிபதி முன் நடந்த இந்த சம்பவம் ஐகோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும், முதன்மை குடும்பநல கோர்ட்டு நீதிபதி, உயர் நீதிமன்ற வளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் உதவி போலீஸ்
கமிசனரை உடனடியாக வரவழைத்து, பாதுகாப்பை பலப்படுத்தும்படி அறிவுறுத்தினார்.