சென்னை, மார்ச் 19: சென்னை காசிமேடு துறைமுகத்தில் நேற்று இரவு நடந்த விஜய் படப்பிடிப்பை பார்க்க வந்த ரசிகர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய் ஜோடியாக நயன்தாராவும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். தினமும் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ரசிகர்கள் பெருமளவில் கூடுகிறார்கள்.

காட்டாங்கொளத்தூரில் படப்பிடிப்பை முடித்து புறப்படும்போது காரில் தன்னை பின்தொடர்ந்த ரசிகர்களுக்கு கார் கண்ணாடியை இறக்கி பத்திரமாக திரும்பி செல்லுங்கள் என்று விஜய் அறிவுரை கூறிய வீடியோ வைரலானது.பரங்கிமலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் படப்பிடிப்பு நடந்தபோது விஜய்யை பார்க்க மாணவ-மாணவிகள், ரசிகர்கள் ஏராளமானோர் கூடினார்கள்.

அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவினால் தடுப்பு வேலி சரிந்து ரசிகர்கள் கீழே விழப்போனார்கள். விஜய் மற்றும் அவரது உதவியாளர்கள் அந்த வேலியை தாங்கிப்பிடித்து ரசிகர்கள் கீழே விழாதபடி தடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் இந்த படத்தின் படப்பிடிப்பு காசிமேடு கடற்கரை பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு நள்ளிரவில் நடந்தபோதிலும் அங்கு விஜய் மற்றும் நயன்தாராவை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டார்கள். அங்கு காத்து நின்ற ரசிகர்கள் முன்னால் வந்து விஜய் கையசைத்தார்.

அதைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் தலைவா என்று கோஷம் போட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவை தொடர்ந்து அங்கு பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதனை தொடர்ந்து அதிகாலை 4 மணி வரை விஜய் – நயன்தாரா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.