விழுப்புரம்: மார்ச் 20:மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது என்றும், அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிப் பெற்று மோடி மீண்டும் பிரதமராக வழி ஏற்படுத்தும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

விழுப்புரத்தில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுக தலைமையில் அமைந்தி ருப்பது மெகா கூட்டணியாகும். ஜெயலலிதா தலைமையில் 1998ம் ஆண்டு நாங்கள் கூட்டணி அமைத்து வாஜ்பாயை பிரதமராக்கினோம். இப்போது மீண்டும் மோடியை பிரதமராக்க கூட்டணி சேர்ந்துள்ளோம்.

அதிமுக கூட்டணி சமூக நீதிக்கு வித்திட்ட அணியாகும். 69 சதவீத இடஒதுக்கீட்டை ஜெயலலிதா கொண்டு வந்து அதை அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில்
சேர்க்க நடவடிக்கை எடுத்தார். இதற்காக நாங்கள் சமூக நீதி காத்த வீராங்கணை என்ற பட்டத்தை வழங்கினோம். அதிமுக என்றவுடன் சத்துணவு, தொட்டில் குழந்தை திட்டம் ஆகியவை நினைவுக்கு வரும். மக்களவை தேர்தலுக்கு பின்னர் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள்.

பெண்களின் முன்னேற்றத்திற்கு இந்த கூட்டணி பாடுபட்டு வருகிறது. பெண்கள் முன்னேற வேண்டுமென் றால் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
இந்த மெகா கூட்டணி முன்பை விட வலிமையாகியிருக்கிறது. இது 100 சதவீதத்திற்கும் மேல் வலிமையானது. 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெறும்.

அதிமுக-பாமக கூட்டணி சேருவதற்கு முன்பாகவே இரு கட்சித் தொண்டர்களும் இணைந்து செயல்பட தொடங்கிவிட்டனர். வருங்காலத்தில் வெற்றிப்பெற வேண்டுமென்றால் இந்தக் கூட்டணி அவசியமென்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.தமிழகம் தலைநிமிரவும், இந்தியா வலிமைப் பெறவும் இந்தக் கூட்டணி அவசியமாகும்.
திமுகவுக்கு நாங்கள் வராததால் ஸ்டாலினுக்கு எங்கள் மேல் ஆதங்கம் உள்ளது. திமுக அமைத்துள்ள கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறாது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் எண்ணுவது பகல் கனவாகும். அது பலிக்காது.

இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் மாநில சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு உள்பட அதிமுக, பாமக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.