சென்னை, மார்ச் 20:பிஎஸ்என்எல். தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், சிபிஐ நீதிமன்றம் பதிவு செய்த குற்றச்சாட்டை ரத்து செய்யக்கோரி மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த வழக்கு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மத்திய அரசில் 2004 முதல் 2007 ம் ஆண்டு வரை தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டி.வி.க்கு, பிஎஸ்என்எல்லின் அதி விரைவு தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதில் அரசுக்கு 1 கோடியே 78லட்சத்து 71.ஆயிரத்து 391 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த ஜனவரி மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இவர்கள் மீது, குற்றச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல், நம்பிக்கை மோசடி, ஊழல் முறைகேடு ஆகிய பிரிவின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை ரத்து செய்யக்கோரியும், சிபிஐ நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கேட்டும், மாறன் சகோதரர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, குற்றச்சாட்டு பதிவின்போது குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தங்கள் தரப்பு நியாயங்களை தெரிவிக்க சென்னை சிபிஐ நீதிமன்றம் உரிய வாய்ப்பு அளித்தது. ஏற்கனவே இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரி மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை, இவர்களுக்கு எதிராக இந்த வழக்கில் மிக தீவிரமான ஆதாரங்கள் இருப்பதாககூறி, வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்து விட்டது. அத்துடன் வழக்கை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்கள் மீது குற்றம் இல்லை என்றால்,வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் எதிர் கொண்டு, அதன் மூலமே குற்றவாளிகள் இல்லை என நிரூபிக்க வேண்டுமே தவிர, பொத்தாம் பொதுவாக ஆதாரமில்லை, ஆவணங்கள் இல்லை என்று கூறும் கூற்றை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள கூடாது. போதுமான ஆதாரங்களை விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதன் அடிப்படையிலேயே குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக்கூடாது.

விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க உத்தரவிட வேண்டும். இவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.இருதரப்பு வாதஙகளையும் கேட்ட
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். அந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. சென்னை சிபிஐ
நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக்கோரி, மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து
நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை நான்கு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.