திருவாரூர், மார்ச் 20 :அனைத்து விவசாயிகளும் வாங்கிய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவாரூர் தொகுதிகுட்பட்ட திருக்குவளையில் தனது தந்தை பிறந்த வீட்டில், மூதாதையரை வணங்கி அவர் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

பின்னர் தனது பாட்டியான அஞ்சுகம் அம்மாளின் நினைவிடத்தில் வழிபாடு செய்தார்.

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பூண்டி கலைவாணனை ஆதரித்து அந்தப் பகுதியில் வீடு வீடாகச் சென்று அவர் வாக்குச் சேகரித்தார்.திருவாரூர் தொகுதியை உள்ளடக்கிய நாகை நாடாளுமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார்.

திருவாரூர் திருக்காரவாசலில் விவசாயிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்தால், அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.

விவசாயிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக கூறினார். முன்னதாக சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டு, அனைத்து விவ
சாயிகளின் பயிர்க்கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.