விழுப்புரம், மார்ச். 20:பங்குனி உத்திர பெருவிழாவை யொட்டி மயிலம் முருகன் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மயில் வடிவிலான மலையில் முருகன் கோவில் உள்ளது. மயிலம் முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் 8-ம் திருவிழாவான நேற்று முருகனுக்கு திருக்கல்யாண உற்சவமும், வெள்ளி குதிரை வாகனத்தில் முருகன் மலை வலம் வரும் காட்சியும் நடந்தது. விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

பின்னர் விநாயகர் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உற்சவர் விநாயகர் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத முருகன் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.

காலை 8.25 மணியளவில் அர்ச்சகர்கள் வேதங்கள் முழங்க மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் 20-ம் பட்ட ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் விநாயகர் தேரையும், அதை தொடர்ந்து முருகன் தேரையும் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பதேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதில் விநாயகர் தேர் 5.30 மணிக்கும், முருகன் தேர் 5.45 மணிக்கும் மலையை சுற்றி வந்து நிலையை அடைந்தன.

இதை தொடர்ந்து பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன நுழைவு வாயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். மேலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடித்தும், அலகு குத்தியும், பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.