கொழும்பு, மார்ச் 20: இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டனாக கருணாரத்னேவை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி வீரர்களின் ஓய்வு, புதுமுக வீரர்களின் தடுமாற்றம் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஓரிரு ஆண்டுகளாக சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அந்த அணியின் தலைமைத்துவ (கேப்டன்) இடமும் கேள்விக்குறியாகவே உள்ளது. இதன்மூலம், நடப்பு ஆண்டில் விளையாடிய 8 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியே மிஞ்சியது. பரிசோதனை முயற்சியாக கேப்டன் பதவி மலிங்காவிடம் வழங்கப்பட்டாலும், அவரது கேப்டன்ஷிப் குறித்து அணி நிர்வாகம் திருப்தி அடையவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் சூழலில், கேப்டனை மாற்றுவது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது. சமீபத்தில், திமுத் கருணாரத்னே தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி, தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இது குறித்து அவர் கூறுகையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நான் தான் கேப்டன் என்று எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

ஆனால் ஒரு நாள் போட்டி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக என்னிடம் தேர்வாளர்கள் கூறியிருக்கிறார்கள், என்றார்.

கருணா ரத்னேவை தவிர, மலிங்கா, மேத்யூஸ், சன்டிமால் ஆகியோரும் கேப்டன் பதவிக்கான போட்டியில் உள்ளனர், என்பது கவனிக்கத்தக்கது.