சென்னை, மார்ச் 20:கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஓராண்டாக சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலாதேவி இன்று ஜாமீனில் விடுதலையானார்.

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியையாக இருந்த நிர்மலா தேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நிர்மலாதேவிக்கு உதவியதாக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் நிர்மலா தேவி வழக்கை விருதுநகர் மாவட்ட போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.அவரை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீன் கிடைத்தும் அவர் வெளியே வர முடியாமல் தவித்தார்.

இந்நிலையில் நிர்மலாதேவியின் சகோதரர் ரவி, குடும்ப நண்பர் மாயாண்டி ஆகியோர் ஜாமீன்அளிக்க முன்வந்தனர். இவர்களின் உத்தரவாத கடிதங்களை ஏற்று விருதுநகர் மாவட்டமுதலாவது குற்றவியல் நடுவர் நீதிபதி மும்தாஸ், நிர்மலாதேவியை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை சிறையில் இருந்து இன்று காலை நிர்மலா தேவி ஜாமீனில் வெளிவந்தார்.