சென்னை, மார்ச் 21:சூலூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 64.
கோவை மாவட்டம், சூலூர் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து அதிமுக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கனகராஜ். இன்று காலை சுல்தான் பேட்டையில் உள்ள தனது வீட்டில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த போது இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, கனகராஜ் குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கனகராஜுக்கு ரத்தினம் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மறைந்த கனகராஜின் உடல் சுல்தான்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான அதிமுகவினரும், பொது மக்களும் கனகராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கனகராஜ் சூலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மனோகரனை விட சுமார் 36 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கனகராஜ் மறைவால் சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் காலியிடம் 22ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 21 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி தொகுதிகளுடன் சூலூர் தொகுதியும் காலியாகி உள்ளது.

எம்எல்ஏ கனகராஜ் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல் வம் மற்றும் அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

சூலூர் எம்எல்ஏவாக திறம்பட பணியாற்றிய கனகராஜ் பல ஆண்டுகளாக பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். மக்களின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். தொகுதி மக்களிடம் நெருங்கிய நட்பு கொண்ட வர். அனைவரிடமும் விருப்பு வெறுப்பின்றி அன்புடன் பழகும் பண்பாளர்.
தொகுதி வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர். கனகராஜ் மறைவு கோவை மாவட்ட மக்களுக்கு குறிப்பாக சூலூர் தொகுதி மக்களுக்கு பேரிழப்பாகும்.
கனகராஜை இழந்து வாடும் அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத் தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கனகராஜின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கனகராஜின் மறைவை அறிந்து ஆற்றாணா துயரமும் வேதனையும் அடைந்ததாக கூறியுள்ளார்.
திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டா லினும் கனகராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்