சென்னை, மார்ச் 21:தமிழகத்திற்கு தேர்தல் செலவின பார்வையாளர்களாக 79 பேர் வந்திருக்கிறார்கள் என்றும் சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி மதுமகாஜன் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறினார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி 39 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று 3-வது நாளாக நடைபெற்றது.

தேர்தல் குறித்து தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு இன்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

39 மக்களவை தொகுதிகளில் இதுவரை 40 பேரும், 18 சட்டமன்ற தொகுதிகளில் 3 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் கணக்கில் வராமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.13 கோடியே 90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருந்த 21,999 பேர்களில் 18,868 பேர் தேர்தல் முடியும் வரை துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.

எஞ்சியுள்ள துப்பாக்கிகள் வங்கி பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3563 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
38 மக்களவை தொகுதிகளுக்கு தலா 2 பார்வையாளர்கள் வீதமும், மத்திய சென்னை தொகுதிக்கு 3 பார்வையாளர்களும் என மொத்தம் 79 செலவின பார்வையாளர்கள் தமிழகம் வந்து விட்டனர்.

மாநிலம் முழுவதுக்கும் செலவின பார்வையாளராக ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி மதுமகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜிவிஜில் செயலி மூலம் 577 புகார்கள் வரப்பெற்றதில் 45 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 187 புகார்கள் நடவடிக்கைக்கு ஏற்றது அல்ல என கருதப்பட்டுள்ளது. 201 புகார்கள் ஆய்வுக்கு பின்னர் கைவிடப்பட்டது. பொது இடங்களில் செய்யப்பட்டிருந்த ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 933 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தனியார் இடங்களில் செய்யப்பட்டிருந்த 1 லட்சத்து 63 ஆயிரம் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு 148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1950 எண்ணுக்கு வாக்காளர் பட்டியல் தொடர்பாக 6853 புகார்கள் வரப்பெற்றதில் 59,789 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டிருக்கிறது.

வங்கி அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்டு அதிகளவில் பணபரிவர்த்தனை செய்யப்பட்டாலும், செயல்படாத கணக்குகள் மீது திடீரென பணம் போடப்பட்டாலும் தகவல் தருமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், திருமண கூடங்கள் மற்றும் சமுதாய கூடங்களில் நடத்தும் நிகழ்ச்சிகள் கண்காணிக்கப்படுகிறது. தனி நபர்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தும் போது காவல்துறையின் அனுமதி தேவையில்லை. இருப்பினும் இந்த நிகழ்ச்சிகள் கட்சி சார்பில் நடைபெறுகின்றனவா என்பது குறித்து கண்காணித்து மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.