சென்னை, மார்ச் 21: பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கு தொடர்பாக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிடிஐ போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். கைதான திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைக்காக அவர் வரும் 25-ம் தேதி கோவையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி அனுப்பி உள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் உடுமலைப் பகுதியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டு மிரட்டி பணம் பறித்ததாகவும், பண்ணை வீட்டிற்கு வரவழைத்து பாலியல் கொடுமை செய்ததாகவும் பரபரப்பான புகார்கள் கூறப்பட்டுள்ளன. இது தொடர்பாக சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநாவுக்கரசை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிவடைந்து 2 நாட்களுக்கு முன் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருநாவுக்கரசு அளித்துள்ள வாக்குமூலத்தில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் பிப்ரவரி 12-ம் தேதி தானும் தனது தந்தையும் காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரை சந்தித்து பேசி அவருடன் இருந்தாக கூறியுள்ளார். ஜெயக்குமார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக உள்ளார். கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார்.

வாக்குமூலத்தில் திருநாவுக்கரசு கூறயது உண்மையா? என்பது அறிய ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பி இருப்பதாக சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்மன் படி ஜெயக்குமார் வரும் 25-ம் தேதி கோவையில் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். இதேபோல் பெண்களின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக தேனி கண்ணன் என்பவரையும் அதே நாளில் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து 2 நாட்களுக்கு முன் அப்பகுதியில் முழு கடையடைப்பு நடைபெற்றது. நேற்று முன்தினம் இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இச்சம்பவம் பற்றி பதிவாகி உள்ள அனைத்து எப்ஐஆர்களும் சிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.