திருச்சி, மார்ச் 21 :முன்னாள் எம்எல்ஏவும் அமமுக மாவட்ட செயலாளருமான வி.பி. கலைராஜன், இன்று திமுக தலைவர் ஸ்டாலினை திருச்சியில் சந்தித்து அக்கட்சியில் சேர்ந்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் வி.பி.கலைராஜன். இவரை அமமுகவில் இருந்து நீக்குவதாக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ வி.பி. கலைராஜன் இன்று திமுகவில் இணைந்தார். திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.பி. கலைராஜன், டிடிவி தினகரனுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் விரைவில் இணைவார்கள். திராவிட இயக்கத்தை பாதுகாக்கும் தகுதியுடைய ஒரே தலைவர் ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின்தான் சரியான தலைமை என்பதால் திமுகவில் இணைந்தேன். மத்தியில் உள்ள மதவாத அரசை எதிர்த்து துணிச்சலாக பேசக்கூடியவர் திமுக தலைவர் ஸ்டாலின்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கலைராஜன் திமுகவில் இணைந்த போது முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.