சென்னை, மார்ச் 21:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் சூழல் நிலவிவருவது, அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான லுங்கி நிகிடி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனார். சென்னை அணிக்கு ஆடிய அவர் 7 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இவரின் அசத்தல் பவுலிங், இந்த ஐபிஎல் சீசனிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக இலங்கை அணிக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் இவருக்கு காயம் ஏற்பட்டது.

தோள்பட்டையில் தசை கிழிப்பு ஏற்பட்டுள்ளதால், இவரை அடுத்த நான்கு வாரங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு தென்னாப்பிரிக்க அணி அறிவுறுத்தியது. இதன்பின்னர், உலகக்கோப்பை தொடருக்கு ஒரு மாதம் மட்டுமே உள்ளது என்பதால், அவர் ஐபிஎல் தொடர் முழுவதும் ஆட மாட்டார் என்றே கூறப்படுகிறது.
சென்னை அணியை பொருத்தவரையில், முழுநேர வேகப்பந்து வீச்சாளர்களாக மோஹித் சர்மா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் இருப்பினும், லுங்கி நிகிடியின் ஆதிக்கமே மேலோங்கியதாக இருந்தது.

ஆனால், நிகிடியும் காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருப்பதால், அந்த அணியின் பவுலிங் ஆர்டரில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.