உலகக்கோப்பை இந்தியாவுக்கு கடினமாக இருக்கும் : டிராவிட்

விளையாட்டு

இந்தூர், மார்ச் 21:சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் அடைந்த தோல்வி, இந்திய அணிக்கு அபாய மணி என்றும் இந்தியாவுக்கு உலகக்கோப்பை தொடர் கடினமாக தான் இருக்கும் என்றும் இந்தியாவின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. நாம் நம்பர் ஒன் அணியாக இருந்ததால், உலகக்கோப்பை தொடரில் எளிதாக இந்தியா கோப்பையை வென்றுவிடும் என்ற பேச்சு இருந்து கொண்டே வந்தது. தற்போது வரைக்கும் நாம் கோப்பையை வெல்லும் ஒரு அணியாகத்தான் சென்று கொண்டிருக்கிறோம். அதேசமயம், அந்த இலக்கு மிகவும் கடினமாக இருக்கும். மிகவும் போட்டி நிறைந்து காணப்படும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது, என்றார்.

மேலும், ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களின் வேலைப்பளு குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு வீரர்களுக்கும் தங்களது உடலை எப்படி கையாள வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். வேலைப்பளு என்பது தனிப்பட்ட வீரர்களை பொருத்து மாறுபடும், என்றார்.