சென்னை, மார்ச் 23: இன்று தொடங்கும் ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் வெற்றிக்கனியை சுவைப்பதற்காக, தோனி தலைமையிலான நடப்பு  சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணியும், கோலி தலைமையிலான ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியும் மல்லுக்கட்டுகின்றன.

சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்பதால், அதுவும் நடப்பு சீசனின் தொடக்கம் ஆட்டம் என்பதால், சிஎஸ்கே அணிக்கு ரசிகர்களின் ஆதரவு இதுவரை இல்லாத அளவிற்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது. 50,000 இருக்கைகள் கொண்ட சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சி.எஸ்.கே-யின் பயிற்சியை போட்டியை காண்பதற்காக மட்டுமே 12,000 ரசிகர்கள் வருகை தந்திருந்தனர் என்றால், இன்றைய ஆட்டம் அரங்கம் நிறைந்த காட்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சீனியர் சி.எஸ்.கே.:
சி.எஸ்.கே. அணியை பொறுத்தவரை, 3 முறை சாம்பியன் (2010, 2011, 2018), நான்கு முறை இறுதிச்சுற்றில் விளையாடியது (2008, 2012, 2013, 2015) என ஐபிஎல் வரலாற்றில் அனைத்து அணிகளுக்கும் தண்ணி காட்டும் அணியாக திகழ்கிறது. சீனியர் அணி என்று விமர்சிக்கப்பட்டாலும், பத்து சீசன்களை கடந்து, தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ, பாஃப் டூ பிளெஸ்ஸிஸ் போன்ற முக்கிய வீரர்களை தக்க வைத்துள்ளது, சென்னை அணியின் பலம். இதில், 30 வயதை கடந்த அனுபவ வீரர்களில் 11 பேர் இடம்பெற்றுள்ளார்கள். சிஎஸ்கேவின் பலம் பேட்டிங்தான். அதிக ரன் அடித்தவர் பட்டியலில் சி.எஸ்.கே.வின் சுரேஷ் ரெய்னா (4985 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார். தோனி (3560), வாட்சன் (2622), முரளி விஜய் (2511), ராயுடு (2416) மற்றும் கேதர் ஜாதவ், சாம் பில்லிங்ஸ் ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அதேப்போல் வேகப்பந்து வீச்சில் மிரட்ட நிகிடி கைவசம் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், பிராவோ, ஷர்துல் தாகூர், மார்க் வுட், மோகித் சர்மா, தீபக் சாஹர் ஆகியோரும் பேக்அப்பிற்கு இருக்கிறார்கள். இம்ரான் தாஹீர், ஹர்பஜன் சிங், ஜடேஜா, கரன் சர்மா ஆகியோரிடமிருந்து பலமான சுழலை எதிர்பார்க்கலாம்.  சி.எஸ்.கே.யின் 25 வீரர்களில் 13 பேர் இளம் வீரர்கள். அதிலும் சிலர் இன்னும் ஒரு ஐபிஎல்-ல் கூட விளையாடவில்லை என்பது, அணியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது.

பலவீனமான பெங்களூரு

பிரமிக்க வைத்த மற்றும் மோசமான ஃபார்ம் என இரண்டையும் ஒருங்கே நிகழ்த்திய பெருமை பெங்களூரு அணியைதான் சாரும். புனே வாரியர்ஸ்-க்கு எதிராக 2013-ல் நடந்த ஐபிஎல் போட்டியில் 5 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து 263 ரன்கள் குவித்து வியப்பில் ஆழ்த்திய ஆர்.சி.பி., 2017-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 49 ரன்களுக்குள் சுருண்டு ஐபிஎல் வரலாற்றில் மோசமான ரெக்கார்டை பதிவு செய்திருந்தது, நினைவுக்கூறத்தக்கது.