பு துடெல்லி, மார்ச் 23: வழக்கம் போல நீண்ட இழுபறிக்குப் பின்னர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்டது.
சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளரை தேர்வு செய்வதில் இன்னும் இழுபறி
நீடித்து வருகிறது. புதுச்சேரியில் வைத்திலிங்கம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் முதன்முதலாக ஒதுக்கப்பட்டது. எனினும் பிற கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் வேட்பாளரை அறிவித்தபிறகும் காங்கிரஸ் மட்டும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது.  இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சோனியாவின் இல்லத்தில் அவரிடம் ஆலோசனை நடத்திய பிறகு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.  அதன்படி வேட்பாளர் பட்டியல் வருமாறு:-

திருச்சி – சு.திருநாவுக்கரசர், தேனி – ஈவிகேஎஸ்.இளங்கோவன், கன்னியாகுமரி- ஹெச். வசந்தகுமார்
திருவள்ளுர்(தனி)- கே.ஜெயக்குமார் கிருஷ்ணகிரி – ஏ.செல்லகுமார், ஆரணி – எம்.கே. விஷ்ணு பிரசாத், கரூர் – ஜோதிமணி, விருதுநகர் – மாணிக் தாக்கூர், புதுச்சேரி – வைத்திலிங்கம்
சிவகங்கை தொகுதிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என பேச்சு அடிப்பட்டது. ஆனால் அவர் மீது வழக்குகள் இருப்பதை காரணம் காட்டி மேலிடம் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது.

ப. சிதம்பரத்தை நிறுத்தலாம் என்றால் அவர் மீதும் வழக்கு உள்ளது. இந்த தொகுதிக்கு சுதர்சன நாச்சியப்பன் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.  இந்நிலையில் திருநாவுக்கரசர் இன்று காலை டெல்லியில் இருந்து சென்னை வந்ததும் விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது:-

திருச்சியில் நாளை மறுநாள் 25-ந்தேதி பிற்பகலில் வேட்பு மனு தாக்கல் செய்வேன். சிவகங்கை தொகுதி வேட்பாளர் யார் என்பது இன்று மாலையில் அறிவிக்கப்படும். திருச்சி தொகுதியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நான் மிகப்பெரிய வெற்றியடைவேன். இவ்வாறு அவர் கூறினார்.
கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் நிறுத்தப்பட்டு இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் வென்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் அதிமுக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டு நேற்று மனுத்தாக்கல் செய்துவிட்டார்.

இதேபோல் தேனி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் கடும் போட்டியை சந்திப்பார் என தெரிகிறது. இந்த தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக துணை முதலமைச்சர் ஒபிஎஸ் மகன் ரவிந்திரநாத் குமார் அமமுக வேட்பாளராக தங்கத் தமிழ்செல்வன் ஆகியோர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.