ராமேஸ்வரம், மார்ச் 24: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போதும், தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போதும் அவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்கின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று இரவு மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் 11 மீனவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் சென்ற 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.