சென்னை, மார்ச் 24:மக்களவை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை கமல் இன்று வெளியிட உள்ளார். இந்நிலையில் மக்களவை தேர்தலில் கமல் போட்டியிட போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மையம் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என அறிவித்த கமல், மார்ச் 20 அன்று தனது கட்சி சார்பில் தமிழகத்தில் 20 தொகுகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். தேர்தலில் தானும் போட்டியிட உள்ளதாக கமல் முன்பே கூறி இருந்ததால், இந்த பட்டியலில் அவரது பெயர் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் கோவையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மீதமுள்ள தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை கமல் வெளியிட உள்ளார்.
இந்நிலையில் கமல் தனது சொந்த ஊரான ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போன்று பொள்ளாச்சி தொகுதியிலும் கமல் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. இந்நிலையில் இன்று வெளியிட உள்ள வேட்பாளர் பட்டியலில் தென்சென்னை வேட்பாளராக ஸ்ரீபிரியா அறிவிக்கப்படலாம் எனவும், தஞ்சாவூரில் கவிஞர் சினேகன் போட்டியிடலாம் என தெரிகிறது. துணைத் தலைவர் மகாதேவன் ஆகியோரின் பெயர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் வரும் மக்களவை தேர்தலில் கமல் போட்டியிட மாட்டார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் மக்களவை தேர்தலுடன் நடத்தப்பட உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் கமல் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் கமலை வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 18 தொகுதிகியில் கமல் சொந்த ஊரான பரமக்குடியிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் கமல் சொந்த ஊரான பரமக்குடியில் போட்டியிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இறுதி வேட்பாளர் பட்டியலை கமல் வெளியிடும் பட்சத்தில், மக்கள் நீதி மய்யம் சார்பில் 25-ம் தேதி அதாவது நாளை கமல் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.