சென்னை, மார்ச் 24:தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் வாக்கு பதிவுக்கு இன்னும் 20 தினங்களே உள்ள நிலையில் 3.45 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி குறித்து நாளை முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.

கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரிக்க காணப்படுவதாலும், வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில் தொண்டர்களுடன்
பிரசாரம் செய்வதை வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் வாக்குபதிவு, மே 23-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ஆகிய பணிகளில் 3.45 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான பட்டியல் துறைவாரியாக ஏற்கனவே அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. தேர்தல் பணி மேற்கொள்ள 3.45 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்கட்ட பயிற்சி முகாம் நாளை நடைபெறுகிறது.

மேலும் தொடர்ந்து வரும் நாட்களில் 2-ம் கட்ட, 3-ம் கட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் மதுரை தொகுதியில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடைவதற்கு 48 மணி நேரம் முன் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரத்தை நிறுத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் மொத்தமுள்ள 67,664 வாக்குச்சாவடிகளில் 7,316 வாக்குச்
சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் அறிக்கை அளித்துள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகள் முழுவதும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பில் வாக்குப்பதிவு நடைபெறும்.