சென்னை, மார்ச் 25: நடிகர் ராதாரவி, பெண்களை இழிவுப்படுத்தி பேசும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற புகார்கள் மீது விசாரணை நடத்த தென்னிந்தியர் நடிகர் சங்கத்தில் ஒரு உட்குழு அமைக்க வேண்டும் என்றும் நடிகை நயன்தாரா கேட்டுக்கொண்டுள்ளார்.  இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நடிகர் ராதாரவி ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலும், பெண்களை பாலியல் ரீதியாக இழிவுப்படுத்தியும் பேசுவதை, பார்வையாளர்கள் உற்சாகப்படுத்த கூடாது. இப்படி உற்சாகப்படுத்துவது நீடித்தால், ராதாரவி போன்றவர்கள் பெண்களை இழிவுப்படுத்தி பாலியல் ஜோக்குகளை வெளியிட்டுக்கொண்டு இருப்பார்கள்.

என்மீது, அன்புக்கொண்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இதுபோன்ற நடத்தைகளை இனிமேலும் ஊக்குவிக்கக்கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன். என்னை குறிப்பிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை பொதுவாக கண்ணிக்குறைவாக பேசும் ராதாரவிக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.  கடவுள் எனக்கு திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடிக்கும் அற்புதமான வாய்ப்பை நல்கியிருக்கிறார். பன்முக கதாப்பாத்திரத்தில், குறிப்பாக, சீதா உள்ளிட்ட பெண் கடவுள்கள் வேடத்திலும், பேய் வேடத்திலும், மனைவி, காதலி, தோழி உள்ளிட்ட பல்வேறு கதாப்பாத்திரங்களிலும் நான் நடிப்பதற்கு காரணம், எனது ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுப்போக்கை வழங்கவேண்டும் என்பதற்காகதான்.

இதுபோன்ற கதாப்பாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன். கடைசியாக, நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி, இதுபோன்ற புகார்களை விசாரிக்க ஒரு உட்குழு அமைக்க வேண்டும். விசாகா வழிகாட்டுதல் முறைப்படி, இந்த விசாரணை நடத்தப்படுமா?. இந்த சமயத்தில் எனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நான் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.