(ஆர்.ரங்கராஜ், சிறப்பு செய்தியாளர்)
சென்னை, மார்ச் 26: மக்களவை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ்க மிட்டி தலைவர் கேஎஸ். அழகிரி கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு நண்பன் காங்கிரஸ் அல்ல, மோடியும், பிஜேபியும் தான் என்றும் அவர் கூறினார்.

மாலைச்சுடர் பத்திரிகைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகள் மீது தமிழக மக்கள் அதிருப்தி அடைந்து இருக்கிறார்கள். இதனால், வரும் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றிப்பெறும்.
கடந்த தேர்தலில் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தனித்தனியாக போட்டியிட்டன. இதனால், தோல்வியை தழுவ நேரிட்டது. தற்போது, இருகட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடுகின்றன.

அத்துடன் இடது சாரி கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் இந்த கூட்டணியில் இணைந்துள்ளன.

அடிப்படை வாதம், பிஜேபியின் சர் வாதிகாரம், சிபிஐ, ரிசர்வ் வங்கி போன்ற அரசியல் சாசன அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை தொடர்ந்து, இவர்கள் ஓர் அணியில் திரண்டு இருக்கிறார்கள்.அத்துடன், மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் நலிந்த பிரிவினருக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகள் இணைந்துள்ளன.

காங்கிரஸ் கட்சியுடன் பல்வேறு பிரச்சனைகளில் ஒருமித்த கருத்துடைய இடது சாரி கட்சிகள் இந்த கூட்டணியில் சேர்ந்திருப்பது வரவேற்க தக்கது. நடைபெறும் மக்களவை தேர்தலில் இந்த அணி,40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பது போன்று, தோற்றத்தை ஏற்படுத்த பிரதமர் மோடியும், அவரது கட்சியினரும் முயற்சி செய்கிறார்கள்.
இவர்கள் தான், நாட்டுப்பற்றுக்கு சொந்தக்காரர்கள் என்பது போல் பேசுகிறார்கள்.

1971ம்ஆண்டு பாகிஸ்தான் மீது போர் தொடுத்து வங்க தேசத்தை உருவாக்கியவர் இந்திராகாந்தி.

காங்கிரஸ் ஆட்சியில் பலமுறை பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ராணுவம் வெற்றி பெற்றுள்ளது.ஆனால் பிஜேபி ஆட்சியில், நாடாளுமன்ற மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பதன்கோர்ட் விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளளனர். அண்மையில் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பி படையினர் உயிரிழந்தனர்.

ஆகவே,காங்கிரஸ் ஆட்சியில்தான் சட்டம், ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப் பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

(கேஎஸ். அழகிரியின் பேட்டியை மாலைச்சுடர் டிவி யூடிப் சேனலில் காணலாம்.)