கொழும்பு, மார்ச் 26: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவருக்கு இலங்கையில் 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்கின்றனர்.
அவ்வகையில் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக கடந்த பிப்ரவரி மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ராவுத்தர் என்பவரும் ஒருவர்.

கைது செய்யப்பட்டவர்களின் கைரேகை மற்றும் அவர்களின் விவரங்களை சரிபார்த்தபோது, ராவுத்தர் ஏற்கனவே இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு, எச்சரித்து விடுவிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

எச்சரிக்கையை மீறி மீண்டும் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார். எனவே, அவருக்கு வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின்கீழ் தண்டனை வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்ற நீதிமன்றம், ராவுத்தருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களது மூன்று படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

நேற்று முன்தினம் 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற நிலையில் இன்றும் 11 பேர் கைது செய்யப்பட்டிருப்பதும், தமிழக மீனவருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும், மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.