சென்னை, மார்ச் 26: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள 2-வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 8.45 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக விற்றுத்தீர்ந்தது.  12-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் தொடக்க போட்டி  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 23-ம் தேதி நடந்தது. பெங்களூருவுக்கு எதிரான இந்தப்போட்டியில், உள்ளூர்  ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது.

இந்த நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது போட்டி நடைபெற உள்ளது. வரும் 31-ம் தேதி நடக்கவுள்ள இப்போட்டியில், சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 8.45 மணி முதல் தொடங்கியது. கவுன்டர் முறை மற்றும் ஆன்லைன் முறை ஆகிய இரண்டு விற்பனையும் ஒருசேர தொடங்கியது. குறைந்தபட்சமாக ரூ.1300-மும், அதிகபட்சமாக ரூ.6,000-மாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல்போட்டிக்கான டிக்கெட் விற்பனையின்போது, நள்ளிரவு முதலே ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு காத்திருந்தனர். அதேபோல், நேற்றிரவே டிக்கெட் விற்பனை நடக்கும் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்த ரசிகர்கள், நீண்ட வரிசையில் விடிய விடிய காத்திருந்த டிக்கெட்டுகளை வாங்கிச்சென்றனர்.

போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானம் 50,000 இருக்கைகள் கொண்டு இருப்பதாலும், கிரிக்கெட் ரசிகர்களின் அதீத ஆர்வத்தின் காரணமாகவும், டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணிநேரங்களிலேயே டிக்கெட்டுகள் முழுவதும் விற்றும் தீர்ந்தது.