சென்னை, மார்ச் 26: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவ வழக்கை உயர் பெண் அதிகாரியை கொண்டு விசாரிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.வழக்கறிஞர்கள் அஜிதா, ஆதிலட்சுமி லோகமூர்த்தி, சுதா உள்ளிட்ட 6 பேர் தாக்கல் செய்த மனுவில்,பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை குறிப்பிட்டதன் மூலம், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை பாதுகாக்கும் கடமையில் இருந்து தமிழக அரசு தவறிவிட்டது .

இந்த வழக்கை, உயர் பெண் அதிகாரியை நியமித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனைகள், மருத்துவ உதவிகள், சட்ட உதவிகள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களின் சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். இந்த மனு மீதான விசாரணையை, தலைமை நீதிபதி தஹிலரமானி, நீதிபதி துரைசாமி ஆகியோர் கொண்ட முதல் டிவிசன் பெஞ்சானது, வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தது.