சென்னை, மார்ச் 26: சென்னையில் நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலைவரை நடந்த வாகன சோதனையில் ரூ.14.50 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் மற்றும் 12 லட்சம் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் இன்று அதிகாலை போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது, வேனில் கொண்டுவரப்பட்ட ரூ.13 கோடி மதிப்பிலான வைர, தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நகை கண்காட்சிக்காக டெல்லியில் உள்ள பிரபல நகைகடையில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, கண்காட்சி முடிந்து மீண்டும் டெல்லிக்கே திருப்பி கொண்டு சென்றுக்கொண்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், அதற்கான முறையான ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதை அடுத்து, நகைகளை திருப்பிஅளித்ததுடன், அவற்றை எடுத்துச்செல்ல அதிகாரிகள் அனுமதிஅளித்தனர்.

இதேபோல், தி.நகரில் வேனில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுச்செல்லப்பட்ட ரூ.9 லட்சத்து 69 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக, துணிக்கடை ஊழியர்கள் 4 பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே, ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில், தங்கக்கட்டிகள், வைர நகைகள், கைக்கடிகாரம் உள்ளிட்ட ஒன்றரை கோடி மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து, பாரிமுனையை சேர்ந்த பிரமோத் குமார், ராஜீவ்பட்டேல் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

மெரினா காமராஜர் சாலையில் காரில் ரூ.96,000 பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதால் அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ரவிசங்கர் என்பவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். அண்ணாசாலையில் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.