சென்னை, மார்ச் 27:சுங்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து, எழும்பூரில் பண பரிவர்த்தனை கடை உரிமையாளர் உட்பட 4 பேரை காரில் அழைத்து சென்று ரூ.27 லட்சம் பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மகும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

எழும்பூர் பிரின்ஸ் பிளாசா வணிக வளாகத்தில் மணி எக்சேஞ்ச் (பண பரிமாற்றம்) கடை நடத்திவருபவர் அமித் மீரான் (வயது 55), இவரது மகன் காஜா மொய்தீன் (வயது 35) மற்றும் முகமது, பஷிர் ஆகிய 3 பேரும் இந்த கடையில் வேலை பார்த்துவருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மாலை ஜீப்பில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கடைக்குள் நுழைந்து, தாங்கள் சுங்கத்துறை அதிகாரிகள் கூறிவிட்டு கடையை சோதனையிட வேண்டும் என கேட்டுள்ளனர். மேலும் விசாரணைக்காக அலுவலகம் செல்ல வேண்டும் எனக்கூறி, அவர்கள் 4 பேரையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.
செல்லும் வழியிலேயே, ரூ. 27 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். முகமது மட்டும் சென்று ரூ.27 லட்சம் பணத்தை கொண்டு வந்து தந்ததும், சென்னை தீவுத்திடல் அருகே ஜீப்பை நிறுத்தி, 4 பேரை விடுவித்துவிட்டு அந்த கும்பல் தப்பியோடியுள்ளது.

இது குறித்து, அமித் மீரான் அளித்த புகாரின்பேரில், எழும்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், அந்தக் கும்பல் நிறுவனத்தில் இருந்த சி.சி.டி.வி., டி.வி.ஆர். உள்ளிட்டவற்றையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவின் மூலம் மர்மகும்பலை தேடிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.