புதுடெல்லி, மார்ச் 27:எதிரிகளின் செயற்கைகோளை தாக்கி அழிக்கும் ஆயுதத்தை இந்தியா வெற்றிகரமாக செலுத்தி மகத்தான சாதனை படைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் அவர் ஆற்றிய உரையில், விண்வெளி ஆராய்ச்சி துறையில் உலகிலேயே 4-வது இடத்தை பிடித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை வருமாறு:

இந்தியாவிற்கு இன்று மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.விண்வெளி துறையில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்கிற பெருமையை இன்று இந்தியா எட்டியுள்ளது.செயற்கை கோளை தாக்கி அழிக்கும் ஆயுதத்தை இந்தியா வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்துள்ளது.

ஒரு செயற்கை கோளை தாக்கி அழிக்கும் ஆயுதத்தை இந்தியா வெற்றிகரமாக ஏவி சோதனை செய்துள்ளது. தாழ் நீள்வட்ட பாதையில் சென்ற ஒரு செயற்கை கோளை தாக்கி அழித்ததின் மூலம் மிஷன் சக்தி என்ற பெயரிலான இந்த தாக்குதல் வெற்றி அடைந்துள்ளது. மூன்றே நிமிடங்களில் மிஷன் சக்தி வெற்றி பெற்றது.அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு பிறகு செயற்கை கோள் எதிர்ப்பு ஆயுதத்தை வெற்றிகரமாக பயன்படுத்திய பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

இதன் மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தில் தற்போது இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.இந்தியாவின் வான் சக்தியை நிலைநாட்டும் வகையில் மிஷன் சக்தி அரங்கேற்றப்பட்டது.

விண்வெளி போட்டியில் ஆயுதங்கள் கூடாது என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடாகும். தற்போது தற்காப்பு நடவடிக்கையாகவே இந்தியா செயற்கை கோளை சுட்டு வீழ்த்தியுள்ளது.விண்வெளியில் எதிரிகளை எதிர்கொள்ளும் ஏவுகணை தற்போது இந்தியாவிடம் உள்ளது. இது இந்திய விஞ்ஞானிகளின் சாதனை என்பதில் இந்தியா பெருமை அடைகிறது. இந்திய செயற்கை கோள்களை பாதுகாக்க இந்த தொழில்நுட்பம் கைகொடுக்கும். விண்வெளித்துறையில் உலகின் தலைசிறந்த 4-வது நாடாக உள்ளது. இன்று நமக்கு தேவையான செயற்கைக்கோள்கள் உள்ளன. அவை விவசாயம், பேரிடர் மேலாண்மை, தொலைத் தொடர்பு, வானிலை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பங்களித்துவருகின்றன. இது விண்வெளி செயல்பாட்டில் இருந்த செயற்கைக்கோளை இன்று இந்தியா தாக்கி அழித்துள்ளது. இது இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சி தானே தவிர, மற்ற நாடுகளுக்கு எதிரானது அல்ல.

இந்த ஆயுதத்தை ஏவியதன் மூலம் இந்தியா சர்வதேச உடன்படிக்கை எதையும் மீறவில்லை. இந்தியாவின் எதிர்கால விண்வெளி பாதுகாப்பில் இது பெரும் பங்காற்றும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார். இதன் அடிப்படையில் நாட்டு மக்க ளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அவர் டுவிட்டரில் அறிவித்திருந்தார்.