கொல்கத்தா, மார்ச் 27: ஐபிஎல் டி 20 தொடரின் இன்றைய லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.  ராஜஸ்தான் அணியுடனான ஆட்டத்தின் போது, அந்த அணி வீரர் ஜாஸ் பட்லரை, பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், மன்கட் முறையில் அவுட் செய்தார். கிரிக்கெட் விதிகளின்படியே தான் இவ்வாறு செய்ததாக அஸ்வின் விளக்கமளித்திருந்தாலும், நடப்பு ஐபிஎல் சீசனின் விவாதப்பொருளாக இது மாறியுள்ளது.

இந்த சர்ச்சை இன்றைய போட்டியிலும் எதிரொலிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பஞ்சாப் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில், கிறிஸ் கெயில், சர்ப்ராஸ் கானிடம் இருந்து அதிரடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.  கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், மன்தீப் சிங் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்கள். பவுலிங்கில் முகமது ஷமி, முஜீப் உர் ரஹ்மான், அங்கித் ராஜ்புத் ஆகியோர் பலம்  சேர்க்கக்கூடும்.

அதேசமயம், முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்கும் கொல்கத்தா அணிக்கு, கிறில் லின், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில்  சிறந்த பங்களிப்பை வழங்குவர்.
நித்திஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல், சுப்மான் கில் ஆகியோரிடம் இருந்து சிறந்த இன்னிங்ஸை எதிர்ப்பார்க்கலாம்.  ஆனால், யாரும் மன்கட் முறையில் அவுட் ஆகாமல் இருந்தால் சரி. (இது நெட்டிசன்களின் கலாய்ப்பு)