சென்னை, மார்ச் 27:  காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள ஏழைகளின் குடும்பங்களுக்கு மாதம் தோறும் ரூ.6000 வழங்கும் திட்டம் சாத்தியமானதுதான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
இந்தியாவில் உள்ள 5 கோடி பரம ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.6000 என ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் அறிவித்து இருந்தார்.

பொருளாதார வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம். இந்த திட்டத்தின் மூலம் 25 கோடி பேர் பயன்பெறுவார்கள்.

இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் என நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்போ, 40 ஆண்டுகளுக்கு முன்போ இதை செயல்படுத்தியிருக்க முடியாது. ஆனால் தற்போதைய நிலையில் பொருளாதாரம் அடுத்த 5 ஆண்டுகளில் இரு மடங்காக உயரும்போது இதை செயல்படுத்த முடியும்.

இந்த திட்டம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். குடும்பத்தில் உள்ள பெண்களின் வங்கி கணக்குகளிலேயே இது செலுத்தப்படும். இந்த திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்.
காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடன் இதற்கான ஆணை பிறப்பிக்கப்படும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இது குறித்த விளக்கம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.