சென்னை, மார்ச் 27: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை என்பதால் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சென்னை தி.நகர் குடியிருப்பு நல்வாழ்வுச்சங்கம் முடிவு செய்துள்ளது.
மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாக்காளர்களை கவருவதற்கு அரசியல் கட்சிகள் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை ரங்கன் தெருவில் செயல்படும் தி.நகர் குடியிருப்பு நல்வாழ்வு சங்கம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டி வருகிறது.

தி.நகரில் பல்வேறு இடங்களில் ’தி.நகர் ஸ்மார்ட் சிட்டி மக்கள் வரிப்பணம் வீண், தண்ணீர் இல்லை அதனால் ஓட்டும் இல்லை, நாங்கள் நோட்டாவுக்கு வாக்களிப்போம்’ என்று எழுதப்பட்ட வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்த சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், 2015-ல் மத்திய, மாநில அரசுகளால் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் தி.நகரில் எந்த பயனும் ஏற்படவில்லை.

மாறாக ஆக்கிரமிப்பு அதிகரித்து மழைநீர் வடிகால், கழிவு நீர் வடிகால் ஆகியவை மிக மோசமாக பயன்படுத்தப்படுகின்றன என்றார்.
தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்தது ஏன் எனக் கேட்டதற்கு, நாங்கள் யாரையும் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்த மாட்டோம். ஆனால் நோட்டாவுக்கு வாக்குகள் அதிகரித்தால் அது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதை குறிக்கும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், எங்கள் பிரச்சனை குறித்து பிரதமர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பினோம். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கூட பதிலளிக்கப்படவில்லை என்றார்.ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தி.நகர் கான்கிரீட் காடாக மாறிக் கொண்டிருக்கிறது. தூய்மைப் படுத்துகிறோம் என்ற பெயரில் 5 ஆண்டுகளை வீணடித்துவிட்டார்கள். குடியிருப்பு வாசிகள் குடிப்பதற்கு மட்டுமின்றி பிற தேவைகளுக்காகவும் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.

பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்து அவர் பேசுகையில், தி.நகரை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவது குறித்து ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றார். நீங்கள் சுயேச்சையாக வேட்பாளர்களை நிறுத்துவீர்களா என்று கேட்டதற்கு, நோட்டாவுக்கு வாக்களிக்கும் ஒவ்வொருவரும் வேட்பாளர்கள்தான். அதனால் தான் எங்களது குரலை விளம்பரப்பதாகை மூலம் வெளிப்படுத்தி இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.