சிதம்பரம், மார்ச் 28:சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுவாமி அபிஷேகத்திற்காக ரூ.42 லட்சம் செலவில் தங்க கூடையை காஞ்சி சங்கர மடம் வழங்குகிறது.

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆண்டுக்கு ஆறு முறை நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அபிஷேகத்தின் போது பால், சந்தனம், பஞ்சாமிருதம் ஆகியவை செய்ய வெள்ளியிலான பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சி சங்கர மடத்தின் மூலம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உத்தரவின் பேரில் ரூபாய் 42 லட்சம் செலவில் ஒரு கிலோ 242 கிராம் எடையில் தங்கக்கூடை செய்யப்பட்டுள்ளது.

இந்த கூடை சிதம்பரம் காசு கடைத்தெருவில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த ஒரு மாதமாக செய்யப்பட்டு வந்தது. இந்த தங்க கூடையில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், பதஞ்சலி வியாக்ரபாதர் மூலநாத சுவாமி உருவங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தங்கக் கூடை வரும் சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகத்தின்போது பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

இந்த தங்க கூடையை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு எடுத்துச் சென்று விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் காண்பித்தனர். அதை பார்வையிட்ட விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதில் சில மாற்றங்களை செய்யும்படி கூறியுள்ளார். அந்த மாற்றங்கள் செய்த பிறகு சங்கரமடம் மூலம் நடராஜர் கோவில் பொது தீட்சதர்களிடம் தங்க கூடை ஒப்படைக்க பட உள்ளது.