சென்னை, மார்ச் 28:கடந்த 19-ம் தேதி ஆந்திராவில் இருந்து ஒரு லாரி சென்னை துறைமுகம் வந்துள்ளது.

அதற்குமுன்னரே நிறைய லாரிகள் அங்கு இருந்துள்ளதால் இடமில்லை எனக்கூறி, அந்த லாரியை திருப்பி அனுப்பியுள்ளனர்.

ஆனால், திருப்பி அனுப்பப்பட்ட இந்த லாரியில் செம்மரக்கட்டைகள் இருப்பதாக துறைமுகத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சென்னையிலுள்ள சுங்கச்சாவடிகள் உஷார் படுத்தப்பட்டு அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் கைப்பற்றப்பட்டு ஆய்வு நடத்தி லாரியை தேடி வந்தனர்.
அப்போது, குன்றத்தூர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவில் அந்த லாரி செல்வது தெரியவந்துள்ளது. இதனடிப்படையில், குன்றத்தூர் போலீசாரின் உதவியுடன் விசாரணை நடத்தியதில், தண்டலம் அருகே கீழ்மாநகர் பகுதியில் உள்ள தனியார் குடோனில் (கிடங்கில்) அந்த லாரி சரக்குகளை இறக்கிவைத்துவிட்டு சென்றுள்ளது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த குடோனில் சோதனை நடத்தினர். அதில், ரூ.3 கோடி மதிப்பிலான 5 டன் செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.