சென்னை, மார்ச் 28: ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்களை சிறையில் தள்ளுவேன் என்று ஸ்டாலின் கூறுவது சசிகலா குடும்பத்தை பற்றித்தான் என்றும், ஜெயலலிதாவின் மரணத்திற்கு அந்த குடும்பமே பொறுப்பு என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சேப்பாக்கத்தில் இன்று செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் ஜெயலலிதாவின் மரணத்தை முன்னிலைப்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை. அவரது மரணத்தில் மர்மம் இருந்திருந்தால் அதற்கு சசிகலாவின் குடும்பம் தான் பதில் சொல்ல வேண்டும்.
இடைத்தேர்தலில் ஜெயலலிதா வின் கைரேகையை பெற்றது தொடர்பாக பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள். இதற்கும் அந்த குடும்பம் தான் பதில் சொல்ல வேண்டும்.

எங்களை பொறுத்தவரை தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்பதைப்போல் நாங்கள் ஜெயலலிதாவை பின்பற்றி வந்தோம். ஆனால் ஸ்டாலின் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதைப்போல் அவரது தந்தை கருணாநிதி சொன்னதை கேட்டாரா? கூடா நட்பு கேடாய் முடியும் என்பதைப்போல் தான் அவர்கள் நடந்துள்ளனர்.எம்ஜிஆர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது திமுக தலைவராக இருந்த கருணாநிதி தேர்தலில் அவரது உடல்நிலையை வைத்து பிரச்சாரம் செய்தார். எங்களுக்கு வாக்களித்தால் ஆட்சியை எம்ஜிஆர் வந்ததும் அவரிடம் ஒப்படைக்கிறோம் என்று கூறினார்.

ஆனால் அவர் கூறியதை மக்கள் நிராகரித்துவிட்டார்கள். இதேபோல் தான் ஜெயலலிதாவை பற்றி இப்போது திமுக பிரச்சாரம் செய்கிறது என்றார்.