சொந்த மண்ணில் களம்காணும் ஐதராபாத்: அலர்ட்டாகும் ராஜஸ்தான்

விளையாட்டு

ஐதராபாத், மார்ச் 29: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய 8-வது லீக் போட்டியில் சொந்த மண்ணில் களம்காணும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்கிறது.
ஐதராபாத் ராஜீவ்காந்தி  சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. பஞ்சாப் அணி உடனான போட்டியில் மன்கட் முறையில் அவுட் ஆனதையடுத்து, தங்கள் அணி வீரர்களை அலர்ட் செய்து களமிறங்குகிறது, ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. பட்லர், ரஹானே, சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பேட்டிங்கிற்கு வலுசேர்க்கின்றனர். ஜோப்ரா ஆர்ச்சரிடமிருந்து மேலும் ஒரு அபார பந்துவீச்சை எதிர்பார்க்கலாம்.

இதுபோக, தவல் குல்கர்னி, கிருஷ்ணப்பா கவுதம், பென் ஸ்டோக்ஸ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசினால், ராஜஸ்தான் அணிக்கு வெற்றி சாத்தியம்.  அதேசமயம், ராஜஸ்தானை போன்றே ஐதராபாத் அணியும் தனது முதல் போட்டியில் தோல்விக்கண்ட நிலையில், இன்று சொந்த மண்ணில் களம்காண்கிறது. பேட்டிங்கில் டேவிட் வார்னர் அபாரம் காட்டுவார்.

காயத்திலிருந்து முழுகுணமடையாத வில்லியம்ஸன் இன்றைய ஆட்டத்திலும் களமிறங்குவது உறுதியடையாத பட்சத்தில், புவனேஷ்வர் குமாரே அணியை மீண்டும் வழிநடத்தக்கூடும். ஜானி பேர்ஸ்டோ, விஜய் சங்கர் ஆகியோர் பேட்டிங்கில் தங்கள் பங்களிப்பை தர, பவுலிங்கை பொறுத்தவரை ரஷித் கான், புவனேஸ்வர்குமாரையே ஐதராபாத் அணி நம்பியுள்ளது.  எது எப்படியோ, முதல் வெற்றியை பெற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால், இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு கேரண்ட்டி.