அகமதாபாத், மார்ச் 30: பிஜேபி தேசிய தலைவர் அமித்ஷா காந்தி நகர் தொகுதியில் போட்டி யிடுவதற்கு இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக ஆயிரக்கணக்கான பிஜேபி தொண்டர்கள் கலந்துகொண்ட ஊர்வலத்தில் அவர் திறந்த ஜீப்பில் சென்றார். குஜராத் மாநிலம் காந்தி நகர் மக்களவை தொகுதிக்கு அமித்ஷா வேட் பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்த தொகுதி மூத்த தலைவர் அத்வானி 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றது ஆகும்.

இம்முறை அத்வானிக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட வில்லை. 91 வயது ஆனதால் அவர் தீவிர பிரச்சாரம் செய்ய முடியாது என்பதை காரணம் காட்டி அவருக்குப் பதிலாக அமித்ஷா போட்டியிடுவ தாக கூறப்படுகிறது. இன்று காலை அகமதாபாத் நகரில் பிரம்மாண்டமான பிஜேபி ஊர்வலம் நடந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொடிகள் மற்றும் பதாகைகள் ஏந்தி ஊர்வலம் சென்றனர். திறந்த ஜீப்பில் அமித்ஷா ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். காலை 11.30 மணியளவில் அங்குள்ள தேர்தல்அதிகாரி அலுவலகத்தில் அமித்ஷா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி கூறியிருப்பதை போல் இந்த தேர்தலில் பிஜேபி தனிப்பெரும்பான்மை பெறும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 300க்கும் அதிகமான இடங்கள் கிடைக்கும் என்றார்.