கோவை, மார்ச் 31:கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடத்தி கொலை செய்தது எப்படி என்பதை அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை அருகே துடியலூர் கஸ்தூரிநாயக்கன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப், வனிதா தம்பதிக்கு 6 வயது மற்றும் 3 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த இரு குழந்தைகளும் திப்பனூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பும், அங்கன்வாடியிலும் படித்து வந்தனர். கடந்த 25-ந் தேதி இந்தக் குழந்தைகளை பள்ளி நேரம் முடிந்ததும் அவர்களது தாத்தா தாமஸ் அழைத்துச் சென்று வீட்டில் விட்டுள்ளார்.

பின்னர் மாலை 6 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். 6 வயதுப் பெண் குழந்தை மாயமானதைக் கண்ட தாய் வனிதா அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக துடியலூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பெ.நா.பாளையம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் மணி, துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிசுந்தரம் மாயமான குழந்தையை இரவு முழுவதும் அப்பகுதியில் தேடினர். ஆனால், குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் வனிதாவின் வீட்டின் அருகே உள்ள சந்தில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் குழந்தையை கண்டுபிடித்தனர். உடலில் காயங்களுடன் இருந்த குழந்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் வனிதா, பொதுமக்களின் உதவியுடன் துடியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்
சென்றார்.

குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிரேதப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கு துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை, போக்ஸோ சட்டத்தின் கீழ் (குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டம்) பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மர்ம நபரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை மேற் கொண்டனர்.இந்த நிலையில் அந்த சிறுமியின் வீட்டின் அருகே வசிக்கும் சந்தோஷ் குமார் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவன் போலீசாரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அவன் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது:-

எனது சொந்த ஊர் தொண்டாமுத்தூர் அருகே உள்ள உல்லியம்பாளையம் ஆகும். இன்டிரீயர் டெக்ரேட்டரிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறேன். நான் தற்போது 2018 முதல் துடியலூர் அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்புதூரில் எனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறேன்.

நான் வசிக்கும் வீட்டின் அருகே வசித்து வரும் சிறுமியை ஏற்கனவே இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளேன். அதனை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று அவளை மிரட்டி வைத்தேன். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்தேன். அப்போது சிறுமியும் அவளது சகோதரியும் ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். 3 வயது தங்கை வீட்டினுள் ஒளிந்து கொள்ள சென்றபோது, நான் அந்த 6 வயது சிறுமியை வாயை பொத்தி சிறுமியை தூக்கிச் சென்றேன்.

மறைவான இடத்தில் வைத்து வன்புணர்வு செய்தபோது சிறுமி அழுதாள். அப்போது சிறுமியை காணவில்லை என்று தாயாரும் உறவினர்களும் தேடி வந்தனர். அப்போது வாயை பொத்தி வீட்டினுள் கொண்டு சென்றேன். இதில் சிறுமி மயக்கமாகிவிட்டாள். அவளை இறுக்கி பிடித்து கழுத்தை நெரித்தபோது அவள் இறந்தவிட்டாள். அப்போது தான் போலீசாரும் மற்றவர்களும் வீடு வீடாக தேடி வந்தனர்.

அந்த நேரத்தில் எனது பாட்டி இறந்துவிட்டார். நான் அந்த சிறுமியின் உடலை துணியால் சுற்றி வீட்டினுள் மறைத்து வைத்துவிட்டு, பாட்டி இறந்த விஷயத்தை உறவினர்களிடம் சொன்னேன். இதனால் ஏராளமான உறவினர்கள் அன்றிரவு எனது வீட்டிற்கு வந்துவிட்டனர். எனது பாட்டி இறந்துவிட்டதால் போலீசார் என் வீட்டினுள் வரவில்லை.
அதிகாலை 4 மணி அளவில் யாருக்கும் தெரியாமல் அந்த சிறுமியின் உடலை எடுத்துச் சென்று வீட்டிற்கு அருகே இருந்த சந்தில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்.
இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறியதாக போலீசார் கூறினர்.

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த அன்றே சந்தோஷ் குமாரின் பாட்டியும் இறந்து இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை கடத்தி கொலை செய்ததை பாட்டி கண்டித்ததால் அவரையும் சந்தோஷ்குமார் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தோஷ்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்து சென்றுவிட்டார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.