சென்னை, மார்ச் 31: சென்னையில் புதிய வாக்காளர் களாக பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பித்த சுமார் 7 ஆயிரம் பேரின் விண்ணப்பம் மீது இன்னும் முடிவெடுக்கப்படாததால் அவர்கள் இந்த தேர்தலில் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதே சமயம், 62 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப் பட்டுள்ளனர். 6,984 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன.மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலையொட்டி சென்னையில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி ஜனவரியில் நடைபெற்றது.

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி, நகரில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் அடங்கிய 16 சட்ட மன்றத் தொகுதிகளிலும் ஒரு லட்சத்து 6,641 பேர் புதிய வாக்காளர்களாக விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டதில் 6,984 விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டன. 7,024 விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை இன்னும் நிறைவடையவில்லை. 62 ஆயிரம் புதிய வாக்ககாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மக்களவை மற்றும் பெரம்பூர் சட்ட மன்ற தொகுதியில் இவர்களால் வாக்களிக்க முடியும்.

இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், வாக்காளர் இறுதிப் பட்டியலில் புதிய பெயர்கள் சேர்க்கப் பட்டதால் சென்னை மாவட்டத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 38.60 லட்சமாக உயர்ந்து இருக்கிறது.
வெளி நாடுகளில் இருந்து 302 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்ததில் 78 பேரின் விண்ணப்பம் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 4,357 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை 2.91 லட்சமாக உயர்ந்துள்ளது.புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் கூட அவர்கள் தங்களது பிற அடையாள அட்டைகளை காட்டி வாக்களிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும் சென்னை மாநகராட்சி ஆணைய ருமான ஜி.பிரகாஷ் கூறியுள்ளார்.