ஒரே குடும்பத்தில் நாற்பது வாக்காளர்கள்

அரசியல்

கிருஷ்ணகிரி, மார்ச் 31: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் அருகே உள்ள எத்திப்பல்லே என்ற கிராமத்தில் ஒரே கூட்டுக் குடும்பத்தில் 40 வாக்காளர்கள் இருப்பது வேட்பாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த குடும்பத்தின் மூத்தவரான குண்டே கவுடு என்பர் தனது சகோதரர்கள் முனுசாமி, சாத்தப்பா மற்றும் இரு சகோதரிகளுடன் இதே வீட்டில் பிறந்தது முதல் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்.

அறுபது பேர் கொண்ட இந்தக் குடும்பத்தில் 40 பேருக்கு வாக்குரிமை உள்ளது. இதை அறிந்து கொண்ட வேட்பாளர்கள் கடந்த சில வாரங்களாக இந்த வீட்டுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து குண்டே கவுடு கூறுகையில், எங்களிடம் வாக்கு கேட்க வருபவர்களிடம் நாங்கள் ஒரே வார்த்தையில் நல்ல வேட்பாளர்களைப் பார்த்து வாக்களிப்போம் என்று சொல்லி வருகிறோம். நாங்கள் நான்கு தலைமுறைகளாக ஒரே குடும்பமாக வசித்து வருகிறோம் என்றார்.

குண்டே கவுடுவின் சகோதரர் முனுசாமி கூறுகையில், எங்கள் குடும்பத்தில் சிலர் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிலும் உள்ளனர். வாக்களிக்க வரவேண்டும் என்று அவர்களை நாங்கள் கேட்டிருக்கிறோம் என்றார்.

இந்த கூட்டுக் குடும்பத்திற்கு 150 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நாள்தோறும் 10 கிலோ அரிசி சமைப்பதாக கூறுகின்றனர். வாழை, மா, பலா, நெல் மற்றும் சிறு தானியங்களும் பயிரிடுகிறார்கள். குடும்பத் தேவைக்கான உணவு தானியங்களை வெளியில் வாங்குவதில்லை என்றும் தாங்களே பயிரிட்டுக் கொள்வதாகவும் முனுசாமி கூறுகிறார்.