வேலூர், மார்ச் 31: உற்பத்தியை பெருக்கும் வகையில் பொறியியல் வல்லுநர்கள் புதிய வழிமுறைகளை காணவேண்டும் என்று விஐடி வேந்தர் ஜி. விசுவநாதன் பேசினார்.

விஐடியில் மூலப்பொருட்கள், உற்பத்தி மற்றும் உருவமாதிரி பற்றிய 3நாள் சர்வதேச மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் இங்கிலாந்து, தென்கொரியா, சீனா, மலேசியா, மற்றும் இந்தியா நாட்டிலிருந்து ஐஐஎஸ்சி பெங்களுரூ, ஐஐடி டெல்லி, என்ஐடிக்கள், அண்ணா பல்கலைக்கழகம், எம்ஜடி, பிஎஸ்ஜி கோவை உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களிலிருந்து இயந்திரவியல் நிபுணர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் என 425 பேர் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டில் உலகளவிலான உற்பத்திக்கான ஆராய்ச்சிகள் சம்மந்தமான 600 ஆராய்ச்சி இதழ்கள் சமர்பிக்கப்பட்டு அதில் 300 ஆராய்ச்சி இதழ்கள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நடைபெற்ற மாநாடு தொடக்க விழாவிற்கு விஐடி இயந்திரவியல் பொறியியல் பள்ளி டீன் டாக்டர் ஆர்.வாசுதேவன் வரவேற்றார். மாநாட்டின் நோக்கம் பற்றி அதன் அமைப்பாளர் டாக்டர் அந்தோனி சேவியர் விளக்கி கூறினார்.

.நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது:-
இந்தியாவில் மின்பற்றாக்குறை உள்ளது. இந்தியாவில் சுமார் 2கோடி பேர் மின்வசதி பெறாமல் உள்ளனர். எனவே மின் உற்பத்தியில் நாம் கவனம் செலுத்த வேண்டும் அதிலும் தரமான மின் உற்பத்தி நாமக்கு தேவை.மின் உற்பத்தியை பொருத்த மட்டில் இந்தியாவில் மணிக்கு 1100 கிலோவாட் உற்பத்தி அளவே உள்ளது. எனவே இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள பொறியியல் வல்லுநர்கள் உற்பத்தியை பெருக்கும் வகையில் புதிய வழிமுறைகளை காணவேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் இந்துஸ்தான் ஏரோநடிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் விஞ்ஞானி பத்மஸ்ரீ சி.ஜி.கிருஷ்ணாதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டின் சிறப்பு மலரினை வெளியிட்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் போலந்து நாட்டை சேர்ந்த லீசெஸ்க் டபோரன்ஸ்கி, இங்கிலாந்து நாட்டின் பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஏ.அறிவழகன், கொரியா நாட்டின் மக்போ பல்கலைக்கழகத்தின் சூ கிம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக பங்கேற்றனர். முடிவில் பேராசிரியர் ஜெயபாண்டியராஜன் நன்றி கூறினார்.