சென்னை, மார்ச் 31: சாலை விபத்தில் தலையில் படுகாயமடைந்து சவீதா மருத்துவ னையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 8 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஹார்ட்வேர் கடையில் ஊழியராக பணியாற்றிவந்தார். இவர் சமீபத்தில் சாலை விபத்தில் மிக மோசமாக காயமடைந்தார். இவரது தலையில் காயமேற்பட்டு அளவுக்கு அதிகமான ரத்தப் போக்குடன் மூளை செயல்பாடு இழந்த நிலையில் சவீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட 10 நாள்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் இறுதியில் அவர் மூளைச் சாவு அடைந்தது தெரியவந்தது. இவரிடமிருந்து பெறப்பட்ட உடல் உறுப்புகள் 8 நோயாளிகளுக்கு புதிய வாழ்வை அளித்துள்ளன.
இதையடுத்து சவீதா மருத்துவமனை சார்பில் உறுப்பு தானம் அளித்தவரின் குடும்பத்தினரை வரவழைத்து பாராட்டுச் சான்று அளித்து கௌரவிக்கப்பட்டது.

இந்த விருதை சவீதா குழும மையங்களின் வேந்தர், டாக்டர் என்.எம். வீரய்யன், சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சவீதா ராஜேஷ் ஆகியோர் வழங்கினர்.