திருத்தணி மார்ச் 31: திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தில் திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்று வருகிறது. அம்மன் வீதிவுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் தீபாராதனை நடத்தி அம்மனை வழிப்பட்டனர்.

திருத்தணி முருக்கம் பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் வருகிற 7ந்தேதி தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 21ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினசாரி மூலவர் அம்மனுக்கு அபிஷேகம், மஞ்சள் காப்பு, சந்தன காப்பு மற்றும் புஜைகள் நடந்து வருகிறது. பிற்பகல் மகாபாரத சொற்பொழிவும் இரவு தெருக்கூத்து கலை நிகழ்ச்சியும் நடந்த வண்ணம் உள்ளன.

நிகழ்ச்சிகளில் கடந்த புதன் கிழமை பாஞ்சாலி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து உடலெங்கும் அலகு குத்தி டிராக்டரில் அம்மனை இழுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இரவு இங்குள்ள விஷ்ணு கோயிலில் பால், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடத்தி பூஜைகள் நடைபெற்றன.
கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். விழாவை முன்னிட்டு கிராமம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரிக்கப்பட்டிருந்தன.