பெங்களூரு, ஏப்.12:பெங்களூருவில் பிரச்சார கூட்டத்தில் தவறான நோக்கத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்டவருக்கு நடிகை குஷ்பு ‘பளார்’ என்று அறை விட்ட சம்பவத்துக்கு ஆதரவு குவிகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ரிஸ்வான் அர்ஷத்தை ஆதரித்து நடிகையும் காங்கிரஸ் பேச்சாளருமான குஷ்பு பெங்களூருவில் உள்ள இந்திரா நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது குஷ்பு பேசியதாவது:

மோடி ஒரேநாள் இரவில் பணமதிப்பு நீக்கத்தை அறிவித்ததன் மூலம் பெண்களின் சேமிப்பை காலி செய்துவிட்டார். 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த பிறகு, ஏடிஎம் வாசலில் காத்திருந்த 100-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரிழந்தனர்.

இவ்வாறு குஷ்பு பேசினார்.

பிரச்சாரத்தை முடித்துவிட்டு வாகனத்தில் இருந்து இறங்கிய குஷ்பு தனது காரை நோக்கி நடந்தார். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜார்ஜ், ஹாரீஷ் உட்பட ஏராளமானோர் குஷ்புவை பின்தொடர்ந்து வந்தனர்.

அப்போது ஒருவர் குஷ்புவை தவறாகத் தீண்டியதால் ஆத்திரமடைந்த அவர், அந்த நபரின் கன்னத்தில் அறைந்தார். காங்கிரஸ் நிர்வாகிகள் அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் குஷ்பு கூறும்போது, ‘அந்த நபர் முதல் முறை என்னை தவறாகத் தீண்டினார். ஏதோ தெரியாமல் செய்கிறார் என கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். இரண்டாம் முறையும் அவ்வாறு செய்ததால் கோபத்தில் அவரை அறைந்தேன்’ என்று தெரிவித்தார். அந்த நபரை குஷ்பு அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதைத் தொடர்ந்து குஷ்புவின் டுவிட்டர் பக்கத்தில் ஏராளமானவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். குஷ்புவின் அதிரடி செயலை பாராட்டியும் விமர்சனம் செய்தும் ஏராளனமான பதிவுகள் இடப்பட்டு இருந்தது.

பெரும்பாலும் குஷ்புவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து ஏராளமானவர்கள் பதிவு செய்திருந்தனர். பெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும். பொது இடங்களில் பயப்படக்கூடாது என்ற ரீதியில் பெரும்பாலானவர்களின் கருத்து அமைந்து இருந்தது. சிலர் அவரது செயலை விமர்சித்தும் பதிவிட்டு இருந்தனர். அதில் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘குஷ்புவிடம் சில்மி‌ஷம் செய்தவர் காங்கிரஸ் தொண்டராக இருந்தால் என்ன செய்து இருப்பார்?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அதற்கு பதில் அளித்துள்ள குஷ்பு, ‘என்னிடம் அறை வாங்கியவர் காங்கிரஸ் தொண்டராகவே இருந்தாலும் எனது நடவடிக்கை ஒரே மாதிரிதான் இருந்திருக்கும்’ என்று கூறியுள்ளார்.