புதுடெல்லி, ஏப்.12:சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சி.பி.ஐ.-க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட் டதை ரத்து செய்தும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க பொன். மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இந்த அதிரடி தீர்ப்பை பிறப்பித்தனர்.

ஓய்வு பெற்ற அதிகாரிக்கு கைது செய்யும் அதிகாரம் இல்லை என்பதால், சிலை கடத்தல் வழக்கு விசாரணையின் போது குற்றவாளிகளை பொன். மாணிக்கவேல் கைது செய்யும் அதிகாரம் கிடையாது என்று உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், அந்த அதிகாரத்தை புதிய ஐஜியான அபய்குமாருக்கு அளித்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அறிவித்தது.