சென்னை, ஏப்.12:திமுக பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்டதில், வீட்டின்முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது கார் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதுதொடர்பாக, 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை டிபி சத்திரம் தர்மராஜா கோயில் தெருவில் வசித்துவருபவர் பரமசிவம் (வயது 45). இவர், அண்ணாநகர் பகுதி திமுக செயலாளராக உள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் இவரது வீட்டின்முன் நிறுத்தியிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முற்பட்டனர். இதனிடையே, தகவலின்பேரில் கீழ்ப்பாக்கத்திலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிலமணிநேரத்தில் தீயைஅணைத்தனர்.

இதில், அவரது காரின் முன்பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து, டிபி சத்திரம் காவல்நிலையத்தில் பரமசிவம் புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் ஜெகதீஸ்வரன், டிபி சத்திரம் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அங்கிருந்த சிசிடிவி பதிவை ஆய்வு செய்தபோது, 2 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், பெட்ரோல் நிரப்பப்பட்ட பாக்கெட்டுகளை வீட்டின்முன் வீசி தீவைத்துவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

நேற்று அந்த பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ஒரு சில கட்சியினர் , வாக்காளர்களிடம் பணம் கொடுக்க முயன்றதாக கூறி பரமசிவம் தலைமையில் திமுகவினர் சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாகவே மர்மநபர்கள் இவரது வீட்டின்முன் இப்படியொரு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், திமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., பரமசிவம் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து, நடந்தவற்றை விசாரித்து கேட்டறிந்தார்.